உள்நாட்டு செய்தி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு பூர்த்தி இன்று, மு.ப 8.45 க்கு மௌன அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதன் இரண்டாம் ஆண்டு பூர்த்தி இன்று அனுஸ்டிக்கப்பகின்றது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி பிரதான தேவாலயங்கள் உள்ளிட்ட பிரதான நட்சத்திர விடுதிகள் சிலவற்றை இலக்கு வைத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் 269 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று முற்பகல் 8.45 க்கு அனைத்து தேவாலயங்களிலும் ஆலய மணியை ஒலிக்கச் செய்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை கேட்டுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று இன்று ஏப்ரல் 21 ஆம் திகதி 2 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் குறித்த தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக மன்னாரில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இன்று புதன் கிழமை(21) காலை 5.45 மணியளவில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் குறித்த திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இதன் போது ஏப்ரல் 21 இடம் பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக இறைபிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு,மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன் போது பாடசாலை மாணவர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.