உள்நாட்டு செய்தி
6000 வாள்கள் இறக்குமதி விசாரணைக்கு பொலிஸ் குழுக்கள்
6000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது குறித்து விசாரணை செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழிநடத்தலில் இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பேராயரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனை இன்று இடம்பெற்ற போது விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் மா அதிபரால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி அவந்தி பெரேரா தெரிவித்துள்ளார்.
சினமன் கிரேண்ட் ஹோட்டலில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய மொஹமட் இன்சாஃப் என்பவரின் தேவைக்காக வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதா , இல்லையா என்பது தொடர்பில் மே மாதம் 06 ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதிபதி மாயாதுன்னே கொராயா ஆகியோர் இன்று அறிவித்துள்ளனர்.