உள்நாட்டு செய்தி
“பயணிகளின் உயிரை துச்சமாக கருதி பஸ் வண்டிகளை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

அலட்சியமாக பஸ் வண்டிகளை செலுத்தி பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சாரதிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
“லுணுகலை, பசறை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன. அதேபோல் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் விரைவாக நலம் பெற வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். ஊவாவில் இவ்வாறான அலட்சியமிக்க விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க முடியாதுள்ளது. இவ்வாறு அலட்சியமாக பயணிகளின் உயிரை துச்சமாக கருதி பஸ் வண்டிகளை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள சட்டங்கள் அதற்கு போதுமானதாக இல்லாவிடின் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டாவது தண்டனை வழங்க வேண்டும்.” என்றார்