Connect with us

உள்நாட்டு செய்தி

பசறை – லுணுகலை பஸ் விபத்து, உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

Published

on

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று காலை 6.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பசறை லுணுகலை பகுதியிலிருந்து கொழும்பு பகுதிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் பஸ் சாரதி உட்பட 30ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சிலர் பதுளை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.