உள்நாட்டு செய்தி
இரண்டாவது டோஸ் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் செலுத்தப்படும்.
புதிய கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதில் குறைவு காணப்பட்டாலும் கண்டி, மொரவக்க மற்றும் கட்டுநாயக்க பகுதிகளில் இருந்து வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் போது இன்னும் சில கொத்தணிகள் உருவாகுவதாக இராணுவத் தளபதியும் கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொவிட் தடுப்பு மையத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இரண்டாவது டோஸை ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் செலுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தையொட்டி மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் இராணுவ தளபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்களை தனிமைப்படுத்துவதற்கான முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
.