உள்நாட்டு செய்தி
இலங்கை பெண்களின் கல்வி மேம்பாட்டிற்கு இந்தியாவின் ஒத்துழழைப்பு தொடரும்..
இலங்கை பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கல்வி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைக்குமென இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். வடமாகாணத்திற்கு மேற்கொண்ட விசேட சுற்றுப்பணயத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இராமநாதன் வித்தியாலயத்தில் கட்டிடமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் உயர்ஸ்தானிகர் கலந்து கொண்டார். நிலைபேறான சமுதாயம் பொருளாதார மற்றும் அரசியல் அபிவிருத்தியை கட்டியெழுப்பும் போது உயர்கல்வி மற்றும் பெண் பிள்ளைகள் மற்றும் பெண்களுக்கு கல்வியினை வழங்க வேண்டியது மிக முக்கியத்துவம் வாய்ந்ததென பாக்லே சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் காங்கேசன் துறைமுகத்திற்கும் விஜயம் மேற்கொண்டதோடு இந்திய நிதியுதவியின் கீழ் 45 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் கண்காணித்தார். இவ்வேலைத்திட்டத்தின் இறுதியாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிக்க முடியும். இந்திய உயர்ஸ்தானிகர் பலாலி விமான நிலையத்திற்கு சென்றதோடு யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கு இடையிலான விமான சேவைகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.
இதேவேளை இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவின் முக்கியமாக கருதப்படும் இருநாட்டும் கடற்படைகளினதும் நெருக்கமான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வலியுறுத்தியுள்ளார்.