Connect with us

உள்நாட்டு செய்தி

நல்லொழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பரிந்துரைகளை முன்மொழிவு

Published

on

நல்லொழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பரிந்துரைகளை அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபை முன்மொழிந்துள்ளது.

பொது நலனுக்காக நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தைக் கட்டியெழுப்ப பல திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபையின் பரிந்துரைகள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (09) கையளிக்கப்பட்டது.

சமயக் கல்வி பாரியளவில் கைவிடப்பட்டிருப்பதாகவும், அதனாலேயே சமூகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டிய அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபையின் பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

பிரிவெனாக்களை ஆரம்பித்தல், அறநெறிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்குதல், கல்வியற் கல்லூரிகளை நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் தற்போதைய ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர், பிரதி அமைச்சர், அமைச்சர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட பதவிகளின் கீழ் ஆற்றிய சேவைக்கு சாசன பாதுகாப்புச் சபை பாராட்டு தெரிவித்தது.

மாணவர் சமூகம் அறநெறி பாடசாலைக் கல்வியை முறையாகக் கற்க வாய்ப்பு வழங்குதல், பௌத்த அறநெறி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கல், பூஜாபூமி காணி உரிமம் இல்லாத விகாரைகளுக்கு அவற்றை வழங்க நடவடிக்கை எடுத்தல், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தேரவாத பௌத்தத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை இனங்காணல், அதற்கு உரிய நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான பரிந்துரைகள் இதன்போது முன்மொழியப்பட்டுள்ளன.

மேலும், நாட்டின் இருப்புக்கும், மத மறுமலர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் பிராந்திய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக, உள்நாட்டு கல்வி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட பரிந்துரைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்த முன்மொழிவுகளில் பெரும்பாலானவை நாட்டில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாகவே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு மாறான சில நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்தார்.

இதன்போது, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜயபூமி, சுவர்ணபூமி போன்ற உரிமம் பெற்ற காணி உரிமையாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் ‘உறுமய’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிரந்தர காணி உறுதி பத்திரம் வழங்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய விவசாய நவீனமயமாக்கல் , மலையக தசாப்தம் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் வெற்றியடைவதற்கும் எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட பிராந்திய சாசன பாதுகாப்புச் சபைகளின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

அத்துடன்,இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின்னர் அது குறித்த செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கவிருப்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சுனந்த மத்துமபண்டார, பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் ஆர்.எம். பி.ரத்நாயக்க மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள சாசன பாதுகாப்புச் சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பௌத்த பீடங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.