உள்நாட்டு செய்தி
வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கொழும்பில் உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினி தரவுகள் தொடர்பான நிபுணர் அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல இன்று (20) அரசாங்க பரிசோதகர்களுக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.
உயிரிழந்தவர் பயன்படுத்திய இலத்திரனியல் சாதனங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் சுவையறிஞரின் அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை பரிசீலித்த நீதவான், நினைவூட்டல் கடிதத்தை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தனது கணவர் உயிரிழப்பதற்கு முன்னர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கத்திற்கான புதிய சிம்கார்டைப் பெற்றுக் கொள்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு தினேஷ் ஷாப்டரின் மனைவி விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான நிபுணர் அறிக்கை கிடைத்த பின்னர் பரிசீலிக்கப்படும் என்றும் மேலதிக நீதவான் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன், தொடர்புடைய சிம் அட்டையை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து, அடுத்த விசாரணை அமர்வில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் சிஐடியினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி கொழும்பினை சேர்ந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.