உள்நாட்டு செய்தி
கெஹலியவுக்கு எதிரான அடிப்படை ஆட்சேபனைகள் தொடர்பான உத்தரவு 26 ஆம் திகதி
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் இருவருக்கு எதிரான வழக்கின் அடிப்படை ஆட்சேபனைகள் தொடர்பான உத்தரவு மார்ச் 26 ஆம் திகதி வழங்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த அறிவித்துள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்ல வெகுசன ஊடக அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில், அவரது தனிப்பட்ட தொலைபேசி கட்டணப் பட்டியல் செலுத்தப்பட்டமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் சுற்றுநிரூபத்திற்கு முரணாக, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 2,30,984 ரூபா 45 சதம் நிதி, தொலைபேசி கட்டணமாக செலுத்தப்பட்டமை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதிவாதியான கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படக்கூடிய சுகாதார நிலைமையை கொண்டிருப்பாராயின், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி முந்தைய வழக்கு விசாரணையின் போது உத்தரவிட்டிருந்தார்.
எனினும், அவர் நேற்றைய தினமும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்பதுடன், பாராளுமன்ற விசேட அமர்வில் கலந்துகொள்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.