Connect with us

உள்நாட்டு செய்தி

சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிப்பு

Published

on

 

உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி சென்னையில் உயிரிழந்த சாந்தன் என்ற சுதேந்திர ராசாவின் சடலம் நேற்று முற்பகல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முற்பகல் 11.35 அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக அவரது சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. எவ்வாறாயினும் அவரது சடலத்தை விடுவிப்பதற்கான ஆவணத்தில் பிரச்சினைகள் காணப்பட்டமையினால் நேற்று பிற்பகல் வரையில் சடலம் விடுவிக்கப்படவில்லை.

ஆவணங்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தன் என்ற சுதேந்திர ராசா சென்னையில் வைத்து கடந்த 28ஆம் திகதி காலமானார்.

குறித்த கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த சாந்தன் விடுவிக்கப்பட்டு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பை அடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

எவ்வாறாயினும் அவர் மாரடைப்பு காரணமாக கடந்த 28ஆம் திகதி காலை 7.50 அளவில் உயிரிழந்ததாக ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையின் பிரதான வைத்தியர் தோணிராஜன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது