Connect with us

உள்நாட்டு செய்தி

குரங்குகளை கட்டுப்படுத்த நாட்டுக் துப்பாக்கி “நிரந்தர தீர்வாக அமையாது”

Published

on

இலங்கையில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து விவசாயத்திற்கும், மனிதர்களுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால், அவற்றை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு நாட்டுத் துப்பாக்கியின் பயன்பாட்டை அனுமதிப்பது என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

“குரங்கு மற்றும் மர அணில்களை விரட்ட அல்லது கட்டுப்படுத்த நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்துவது என்ற நடைமுறை தொடங்கிவிட்டால், அது இதர விலங்குகளை கடுமையாக பாதிக்கும். அந்த துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் ஈயத்தினால் ஆன சிறிய குண்டு ஏனைய விலங்கினங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும், சில சமயங்களில் அந்த விலங்குகள் உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது” என சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின், கொள்கை மற்றும் செயற்பாட்டு அதிகாரி ஜனக விதானகே தெரிவிக்கின்றார்.

கேகாலை மாவட்டத்தில் விவசாயத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் குரங்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில் விவசாயிகளுக்கு உயர்தர நாட்டுத் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படுமென, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று (14) தெரிவித்திருந்தார்.

“கேகாலை மாவட்டத்தில் உள்ள  600 விவசாய அமைப்புகளுக்கு நாட்டுத் துப்பாக்கிகளை வழங்கவுள்ளேன். குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதையே இந்த முயற்சியின் நோக்கமாகக் கொண்டுள்ளது.”

விவசாயிகளுக்கு குரங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாட்டுத் துப்பாக்கி தீர்வாகாக அமையாது என, சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் கொள்கை மற்றும் செயற்பாட்டு அதிகாரி ஜனக விதானகே வலியுறுத்துகின்றார்.

”விவசாயிகளுக்கு குரங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாட்டுத் துப்பாக்கி தீர்வாகாது, அதைவிட விஞ்ஞானபூர்வமான தீர்வுகள் இருக்கின்றன. இந்த காற்று துப்பாக்கி அல்லது நாட்டுத் துப்பாகி மூலம் சுட்டு விலங்குகளை அச்சுறுத்தி விரட்டுவது என்பது தற்காலிகமான தீர்வு தான். அது நிரந்தர தீர்வுக்கு வழி செய்யாது.”

இலங்கையில் அதிகளவு நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்துற நிலைமை அதிகரித்துள்ளதாகவும், அதனைப் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பத்திரம் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.  

விவசாயத்தை பாதுகாக்கவென விவசாயிகளுக்கு வழங்கப்படும் நாட்டுத் துப்பாக்கியை அவர்கள் வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

“விவசாயிகளுக்கு என அளிக்கப்படும் நாட்டுத் துப்பாக்கி வேறு சில வழிகளில் தவறாகவும், சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தும் அபாயமும் உள்ளது. குரங்கு மற்றும் மர அணிலை இலக்கு வைத்து சுடப்படும்போது வேறு விலங்குகளும் உயிரிழக்கக் கூடும்.”

மனிதத் தேவைக்காக விலங்குகளின் வாழ்விடமாக காடுகள் அழிக்கப்படுவதே மனித-விலங்கு மோதல் மற்றும் விவசாய உற்பத்திகளை விலங்குகள் சேதப்படுத்துவதற்கு பிரதான காரணமாக அமைவதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின், கொள்கை மற்றும் செயற்பாட்டு அதிகாரி ஜனக விதானகே சுட்டிக்காட்டுகின்றார்.  

“காடுகளை வேகமாக அழித்து அவற்றை விவசாய நிலங்களாக மாற்றும் போது, வனவிலங்குகள் உணவைத் தேடி மக்கள் குடியிருப்பை நோக்கி வருவது வழமையாகிவிட்டது. தமது வாழ்விடம் குறையும் போது வனவிலங்குகள் காடுகளைவிட்டு வெளியே வரும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.”  

பாதுகாப்பற்ற முறையில் கருவிகளை பயன்படுத்தி விலங்குகளை விரட்ட முயற்சிப்பதை விட,  விஞ்ஞான பூர்வமான முறைகளை பயன்படுத்தி விலங்குகளுடைய பாதிப்பினை கட்டுப்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம், விவசாயத் திணைக்களம் மற்றும் அரசாங்கம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

“இலங்கையில் குரங்குகளால் மட்டுமே பிரச்சினை இல்லை. யானைகள், மயில்கள் போன்றவையாலும் பிரச்சினைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக மயில்கால பெரும்பிரச்சினை. மயில்களை உணவாகக் கொள்ளும் நரிகள் பெருமளவு சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டன. அவை மயிலின் முட்டைகளை சேதப்படுத்தும். இது ஒரு உதாரணமே. இப்படி உணவுச் சங்கிலியில் ஒவ்வொரு விலங்கும் மற்றொன்றை சார்ந்தே உள்ளன. ஒன்றை அழிக்கும் போது மற்றொன்று பாதிக்கப்படும், அல்லது அந்த விலங்குகளால் விவசாயம் பாதிக்கப்படும். உணவுச் சங்கிலித் தொடர் என்பது அறிவியல்ரீதியாக மிகவும் முக்கியமானது. அதை இலங்கை அரசு உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை.”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *