உள்நாட்டு செய்தி
இலங்கையில் வெங்காயத்திற்கு பாரிய நெருக்கடி: விடுக்கப்பட்டுள்ள கோரி
இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரியவருகிறது.
இந்த தடைக்கு மத்தியிலும் இந்தியாவிடமிருந்து விலக்கு பெறுவதற்கான இலங்கையின் முயற்சி பலனளிக்கவில்லை எனவும் இதன் விளைவாக இறக்குமதியாளர்கள் அதிக விலையில் பெரிய வெங்காயத்தை வாங்குவதற்கு மற்ற சந்தைகளை நாடுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், இலங்கை போன்ற நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய வெங்காய ஏற்றுமதியாளரான இந்தியா, உற்பத்தி வீழ்ச்சியைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் உள்நாட்டு விலை இருமடங்காக உயர்ந்ததை அடுத்து, டிசம்பர் 8, 2023 அன்று ஏற்றுமதியைத் தடை செய்தது.
எவ்வாறாயினும், தடை செய்யப்பட்ட போதிலும் விசேட ஏற்பாடுகளின் கீழ் இந்தியாவில் இருந்து 100,000 தொன் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு இலங்கை விலக்கு கோரியது.
எனினும் இந்த முயற்சி பலனளிக்கவில்லை, எனவே உள்ளூர் சந்தையில் விலைகள் அதிகமாகவே காணப்பட்டன.பெரிய வெங்காயத்தின் மொத்த விலை தற்போது கிலோ ரூ.350-375 ஆக உள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பெரிய வெங்காயம் தற்போது பாகிஸ்தானில் இருந்து ஒரு தொன் 1200 அமெரிக்க டொலர்கள் விலையில் இறக்குமதி செய்யப்படுகிறது.
சாதாரண சூழ்நிலையில், இலங்கை ஒரு மாதத்திற்கு சுமார் 20,000 தொன்களை இறக்குமதி செய்கிறது. விலை மிக அதிகமாக இருப்பதால், இப்போது இறக்குமதி அளவு 12,000-15,000 தொன்னாகக் குறையலாம்.
பாகிஸ்தான் தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை விதித்துள்ளது என்றார்.
இதற்கிடையில், கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, தடை இன்னும் நீக்கப்படவில்லை, எனவே இந்தியா இலங்கைக்கு ‘பெங்களூர் றோஸ் ஒனியன்’ எனப்படும் மற்றொரு வகை வெங்காயத்தை பரிந்துரைத்தது. நாங்கள் அதை இங்குள்ள வர்த்தக அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளோம். இது மற்றொரு வகையான வெங்காயம், ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.