உள்நாட்டு செய்தி
ரமழானில் அரசு ஊழியர்களின் பணி நேரங்களில் மாற்றம்..!
ரமழானில் முஸ்லிம் அரச ஊழியர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்வதற்கான பணி அட்டவணையை ஏற்பாடு செய்யுமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்து இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருட ரமழான் மார்ச் 12 ஆம் திகதி முதல் ஏப்ரல் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், அக்காலப்பகுதியில் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என உரிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரமே விசேட விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரமழான் நிறைவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்னர், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச சேவையின் சட்ட சபைகளின் தகுதியான முஸ்லிம் அதிகாரிகளுக்கு பண்டிகை முன்பணம் வழங்கப்படும் என பொது நிர்வாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.