உள்நாட்டு செய்தி
ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கை அதிகரிப்பு – ஜீவன் தொண்டமான் நடவடிக்கை
சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அகில இலங்கை மலையக ஐயப்ப ஒன்றியத்தின் நிர்வாக குழுவினருக்கும், அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் அமைச்சில் இன்று நடைபெற்றது.
இதன்போது ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு 100 விசாக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றது, அதன் செல்லுபடிகாலம் ஒரு மாதமாக உள்ளது. எனவே, விசாக்களையும், கால எல்லையையும் அதிகரித்து தருமாறு ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து இலங்கைக்கான இந்திய தூதவர் கோபால் பாக்லேவை தொலைபேசிமூலம் தொடர்புகொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், இது தொடர்பில் பேச்சு நடத்தினார்.
இதன்பலனாக நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், செல்லுபடியாகும் கால எல்லையை 2 மாதங்களாக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுத்த அமைச்சர் ஜீவன்தொண்டமானுக்கு, இலங்கை மலையக ஐயப்ப ஒன்றியத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்