உள்நாட்டு செய்தி
நாடாளுமன்ற உறுப்பினரை அச்சுறுத்தியதாக இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலாளர் மீது குற்றச்சாட்டு
பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன மற்றும் இராணுவ தளபதி விக்கும் லியனகே ஆகியோர் தம்மை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குற்றம் சுமத்தியுள்ளார்.
இராணுவ உயர் அதிகாரிகளின் வாகன பயன்பாடு தொடர்பில் தாம் சுட்டிக்காட்டியதற்காக இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது எனவும் இதன் மூலம் தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.விசாரணை நடத்த வேண்டும் இந்த இருவரையும் நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
மக்களின் சார்பில் தான் பேசியதாகவும் தம்மை கொலை செய்தாலே தவிர இந்த குரல் கொடுக்கும் நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மக்களுக்காக பேசுவதை அடிவருடிகளினால் நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற செயற்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இவ்வாறு தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.பாதுகாப்புச் செயலாளரும் இராணுவ தளபதியும் சண்டியர்களைப் போல் நாடாளுமன்ற உள்ளேயே தம்மை அச்சுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இராணுவ படை வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பதிலாக உயர் இராணுவ அதிகாரிகளுக்கு செலவிடும் அதிகளவான தொகையை குறைக்குமாறு தாம் பரிந்துரை செய்ததாகவும் இது தொடர்பில் இருவரும் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.