உள்நாட்டு செய்தி
மக்களிடம் செல்லாமல் அதிகாரிகளின் மூலம் மட்டுமே பிரச்சினைகளை கண்டறிவது எனது கொள்கை அல்ல – ஜனாதிபதி
மக்களிடம் வந்து பிரச்சினைகளைத் தீர்ப்பது ஒரு அரசியல் நாடகமோ அல்லது ஊடக காட்சிப்படுத்தலோ அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சுமார் நான்கு ஆண்டுகள் உள்ளன. கிராமத்திற்குச் செல்வது அதிகாரத்திலிருந்து செய்ய வேண்டிய பணியை நிறைவேற்றுவதற்காகும். எதிர்க்கட்சியிலிருக்கும் போது சென்றாலும், வேறு எந்த ஜனாதிபதியும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க பின்தங்கிய கிராமங்களுக்குச் செல்லவில்லை.
கொழும்பில் இருந்துகொண்டு அதிகாரிகளிடம் மட்டுமே கலந்தாலோசித்து மக்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்பது எனது நடைமுறை அல்ல. யார் இந்த முறைமையை விமர்சித்தாலும் “நான் எனது திட்டப்படி வேலை செய்கிறேன்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவுகளை சாட்டாக வைத்துக்கொண்டு எந்தவொரு தனிநபரோ அல்லது குழுவோ சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தெரணியகல பிரதேச செயலக பிரிவில் உள்ள திக்கெல்லகந்த கிராம சேவகர் பிரிவில் உள்ள திக்கெல்லகந்த கனிஷ்ட வித்தியாலய வளாகத்தில் நேற்று (06) நடைபெற்ற ஒன்பதாவது “கிராமத்துடன் உரையாடல்“ நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.