உள்நாட்டு செய்தி
ஜப்பானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்திப்பு
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காக ஜப்பானின் பாராளுமன்ற பிரதிநிதிகள் பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரிமாளிகையில் சந்தித்துள்ளனர்.பிரதமர் குணவர்தன, தூதுக்குழுவை வரவேற்றதுடன், உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி, ரயில்வே, சுகாதாரம், கல்வி மற்றும் இளைஞர் திறன் மேம்பாடு போன்ற பல துறைகளில் ஜப்பான் இலங்கைக்கு தொடர்ந்து உதவி வருவதாகத் தெரிவித்தார்.உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிக்கான விசேட பாராளுமன்றக் குழுவின் உறுப்பினரான எம்.பி.க்கள் குழுவின் தலைவரான நகானிஷி யூசுகே, ஜப்பான் இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு எனவும் விரைவான அபிவிருத்திக்கு மேலதிக உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புகள் இருப்பதைக் குறிப்பிட்ட அவர், இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் கல்வித் துறைகளில் ஜப்பான் உதவ முடியும் என்றார்.அதிகளவான இலங்கை இளைஞர்கள் ஜப்பானிய மொழியைப் படிப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கும்புர மற்றும் ரோஹன திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.