உள்நாட்டு செய்தி
குற்றச்செயல்களில் ஈடுபட்ட 5 பொலிஸாருக்கு பணி இடைநீக்கம்
கிழக்கு மாகாணத்தில் குற்றச்செயல்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் இன்று (23.08.2023) தகவல் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு- வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6.08.2023 அன்று மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்டபிள் காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த அவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் .
இதனைத் தொடர்ந்து கடந்த 11ஆம் திகதி ஏறாவூரைச் சோந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் பணிபுரிந்துவரும் கடையில் இருந்து பணியை முடித்துக்கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
இதன்போது அப்பகுதியில் வீதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் குறித்த இளைஞனை நிறுத்தி, அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை கடந்த 20ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றிவந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஒரு இலச்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையல் அவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு குற்றச் செயல் காரணமாகக் கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்