உள்நாட்டு செய்தி
தெப்பக்குளத்தில் பாய்ந்து இளம் தாய் தற்கொலை !
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.அவரின் சடலம் இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரின் ஒரு வயது குழந்தைக்கு என்ன நடந்தது என்பது இன்னும் தெரியாமல் உள்ளது.
தனது குழந்தையுடன் அவர் குளத்தில் குதித்தாரா அல்லது என்ன நடந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.லோகி தோட்டத்தைச் சேர்ந்த மகாமணி தயானி (வயது – 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஐந்து பக்கத்தில் கடிதமொன்றையும் அவர் எழுதியுள்ளார். குறித்த கடிதம், திருமண பதிவு அட்டை, தேசிய அடையாள அட்டை என்பவற்றை தெப்பக்குளத்துக்கு அருகில் வைத்துவிட்டே குதித்துள்ளார்.
தன்னையும், தனது குழந்தையையும் கணவரும், அவரின் குடும்பத்தாரும் துன்புறுத்தினர் என இக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலதிக பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.