உள்நாட்டு செய்தி
அதிகரிக்கும்போதைப்பொருளை கட்டுப்படுத்த விசேட குழு நியமனம்
நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.இலங்கையில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் அமுல்படுத்தப்பட வேண்டிய பொறிமுறைகளைக் கண்டறிந்து அதன் அவதானிப்புகளைச் சமர்ப்பிப்பதற்கும் இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அண்மையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்பட்டது.இலங்கை பொலிஸ், தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை ஆகியன குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு, நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தத் திணைக்களங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.பாரியளவிலான போதைப்பொருள் நாட்டிற்குள் செல்வதை நிறுத்துவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அண்டை நாடுகளின் புலனாய்வு அமைப்புகளும் இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், புகையிலை மற்றும் மதுபான பாவனையை குறைப்பதற்கு எடுக்கக்கூடிய பல ஆலோசனைகளை குழுவிடம் முன்வைத்தனர்.மேலும், போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை செயற்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.