உள்நாட்டு செய்தி
வறுமைக் கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு இலவச மாதாந்த பருவச் சீட்டு !
வறுமைக் கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு இலவச மாதாந்த பருவச் சீட்டுகளை(சீசன் டிக்கட்) வழங்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் நேற்றைய தினம் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்தார்.மாணவர் மாதாந்த பருவச் சீட்டு கட்டணத்தில் 9 வீதம் மட்டுமே வசூலிக்கப்பட்டது. தற்போது 30 வீதம் வரை வசூலிக்கப்படுமென்ற திட்டமுள்ளதா?’ என கின்ஸ் நெல்சன் இதன்போது கேள்வி எழுப்பினார்.இதற்குப் பதிலளித்த அமைச்சர்,
”வறுமைக் கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு இலவச மாதாந்த பருவச் சீட்டுகளை வழங்க திட்டமிட்டள்ள அதேவேளை பணம் செலுத்தக் கூடியவர்கள் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கை செலுத்தினால் மீதியை வழங்க தயாராக உள்ளோம்.அரசிடமிருந்து பெறப்படும் பெருந்தொகையான மானியத்தின் அடிப்படையிலேயே கல்விக்கடன் நடைமுறைப்படுத்தப்பட்டு, வருடத்துக்கு இரண்டு பில்லியன் ரூபா மானியமாக வழங்கப்படுகிறது.ஆனால் நிதி நெருக்கடி காரணமாக திறைசேரியால் அந்தப் பணத்தை வழங்க முடியாதுள்ளது.மாணவர் பேருந்து சேவையை இயக்குவதில் போக்குவரத்து சபைக்கும் தனியார் துறைக்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாதாந்த பருவச் சீட்டுகளுக்கு அதிக மானியம் வழங்கும்போது பேருந்துகளின் எண்ணிக்கை குறைவடையும்.எனவே, இது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.