உள்நாட்டு செய்தி
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் எச்சரிக்கை
யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெஜ்லட் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா கூட்டத்தொடர் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் மனித உரிமைகள் ஆணையாளர் முன்கூட்டியே தனது உத்தியோகப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து உரிய அவதானம் செலுத்தப்படாதுள்ளமை மேலும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கான சமிஞ்ஞயை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தண்டனைகளில் இருந்து தப்பிக்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகள், இராணுவமயமாக்கல் உள்ளிட்ட விடயங்கள் கவலையளிப்பதாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, இலங்கையில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான மாற்று பொறிமுறைகள் குறித்து ஆராயுமாறு உறுப்பு நாடுகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெஜ்லட் மேலும் தெரிவித்துள்ளார்.