உள்நாட்டு செய்தி
1,000 ரூபாக்கு அமைச்சரவை அங்கீகாரம்
சம்பள கட்டுப்பாட்டு சபை மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொழில் உறவுகள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தினூடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளம் 1,000 ரூபா பெற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை செயற்படுத்தும் வகையில் தோட்டத் தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும், அது வெற்றியளிக்கவில்லை.
பெருந்தோட்ட முதலாளிமார் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள், நாளாந்த சம்பளத்தை 920 ரூபா வரை மாத்திரம் அதிகரிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயங்களை கருத்திற் கொண்டு, வரவு செலவு திட்ட யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமான வகையில் சம்பள கட்டுப்பாட்டு சபை மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2019 – 2021 பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள கூட்டு ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, 50 ரூபா நிலையான கொடுப்பனவு உள்ளிட்ட 750 ரூபா நாளாந்த சம்பளமாக வழங்கப்படுகிறது.