Connect with us

அரசியல்

கஜேந்திரன் உட்பட 18 பேருக்கு பிணை!

Published

on

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினா் செ.கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட 18 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் நேற்று இரவு 11 மணியளவில் யாழ்.பதில் நீதிவானின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 18 பேரையும் தலா 3 லட்சம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளாா்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ்.நகரில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 18 பேர் நேற்று மதியம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி தமிழ்தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் போராட்டங்கள், பேரணிகள் நடத்துவதை தடுப்பதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிஸார் தடை உத்தரவு பெற்றிருந்தனர்.

எனினும் தடை உத்தரவை மீறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்ப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தை தடுக்க முயற்சிக்கப்பட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே 18 பேரையும் பிணையில் விடுத்து யாழ்ப்பாண பதில் நீதவான் உத்தரவிட்டார்.