உள்நாட்டு செய்தி
அதிகாரங்களைப் பகிரத் தயார்
13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதியரசர் குழாமின் தீர்ப்புக்கமைய செயற்படுவேன். அதிகாரங்களைப் பகிரத் தயார்.
• காணி ஆணைக்குழுவை ஸ்தாபித்து, தேசிய காணிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். – ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டில் தெரிவிப்பு
ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
அதற்கமையவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கட்டுப்பட்டுள்ளதாகவும், இல்லையெனில், பாராளுமன்றத்திற்கூடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினராலும் தனிப்பட்ட பிரேரணையை முன்வைக்க முடியுமெனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லையெனில், அதனை நடைமுறைப்படுத்த நேரிடும் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.