உள்நாட்டு செய்தி
சீனா, இந்தியாவிடம் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு மத்திய வங்கி ஆளுநர் கோரிக்கை
சீனா, இந்தியாவிடம் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு மத்திய வங்கி ஆளுநர் கோரிக்கைகடன்களை தள்ளுபடி செய்வதற்கான இணக்கப்பாட்டை வழங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் மத்திய வங்கி ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.BBC உலக சேவை நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் வசதியை பெற்றுக்கொள்ள இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாடு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதனூடாக அனைத்து தரப்பினருக்கும் நன்மை கிட்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை, சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் தலைவர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.இந்த கலந்துரையாடல் காணொளி தொழில்நுட்பம் மூலம் நடைபெற்றதாக சீன தூதரக ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் இலங்கையின் தற்போதைய கடன் நெருக்கடி தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.நாட்டின் கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கும் தேவையான ஆதரவை வழங்குவதற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் தலைவர் இணங்கியுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.இதேவேளை, அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் Rear Admiral Eileen Laubacher மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.இந்நிலையில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இதன்போது அமெரிக்க பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு இலங்கை செயற்பட்டு வருவதால், அனைத்து கடன் வழங்குநர்களும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆதரவளிப்பதாக Eileen Laubacher மேலும் தெரிவித்துள்ளதாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.