Connect with us

உள்நாட்டு செய்தி

போதைப்பொருள் வலையமைப்பு முடக்கம்

Published

on

இந்தியாவில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவரும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான கிம்புல எல குணா, புகுது கண்ணா உள்ளிட்ட 09 இலங்கையர்களை இந்திய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மேலும், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பெரும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை வழிநடத்திச் செல்லும் ஹாஜி சலீம் என்ற பாகிஸ்தான் பிரஜை அந்நாட்டு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் இலங்கை அகதிகள் தங்கியுள்ள சிறப்பு முகாமில் இருந்த போதே இந்திய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மொஹமட் அஸ்மின், அழகப்பெருமவின் சுனில் காமினி பொன்சேகா, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, லடியா சந்திரசேன, தனுஷ்க ரொஷான், வல்லே சுரங்க மற்றும் திலீபன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிம்புலாலே குணா மற்றும் புகுது கண்ணா ஆகியோர் இந்தியாவிலும் இலங்கையிலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக உழைத்துள்ளதாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஹாஜி சலீமின் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இயங்கிவரும் பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் தலைவர் ஹாஜி சலீம் என இந்திய பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மார்ச் மாதம், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி சேகரிக்க முயன்றதாக, மேரி பிரான்சிஸ்கா என்ற இலங்கைப் பெண் உட்பட 05 பேர் இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டனர். இதேவேளை, கடந்த வருடம், விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரான சத்குணம் என்ற சபேசன், 300 கிலோ ஹெரோயின் மற்றும் 05 ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட 09 மி.மீ ரக துப்பாக்கி தோட்டாக்களுடன் ரவிஹன்சி என்ற கப்பலுடன் லட்சம் தீவு கடலில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.