உள்நாட்டு செய்தி
75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட நடவடிக்கை
தேசிய மற்றும் மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
“ஒன்றாக எழுவோம்” என்ற தொனிப்பொருளில், 75 ஆவது சுதந்திர தின நிகழ்வை 2023 பெப்ரவரி 04 ஆம் திகதி காலிமுகத்திடலில் விமர்சையாகக் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
75 ஆவது சுதந்திர தின நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இப்பணிப்புரையை விடுத்தார்.
சுதந்திர தின நிகழ்வுடன் இணைந்ததாக பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, சைக்கிள் சவாரி, சுதந்திர தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டப் போட்டிகள், வரலாற்று மற்றும் அரிய புத்தக கண்காட்சி ஆகியவை அவற்றில் முக்கிய அம்சங்களாகும்.
அதேபோன்று, சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் குறைந்த வருமானம் பெறும் 2000 குடும்பங்களுக்கு வீடமைப்புத் திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.