உள்நாட்டு செய்தி
“60 வீதமானோர் ஒருவேளை அல்லது இருவேளை உண்கின்றனர்”
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொண்டுள்ளனர் எனவும், அவர்களுக்கான உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பணிப்பாளரும், உலக தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளருமான கலாநிதி சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
மலையக பிரதேசத்தில் போசாக்கு மட்டமானது மிகவும் குறைவாக காணப்படுகின்றது. அதற்கு அமைவாக 6 பிரதேசங்களில் மனித அபிவிருத்தி தாபனம் போசாக்கு திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.
இதில் பாலர் பாடசாலை மாணவர்கள், கர்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர் போன்றவர்களின் போசாக்கு மட்டத்தை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
இத்திட்டத்தின் கருத்து பரிமாற்றத்தின் செயற்பாடாக இன்றைய தினம் (07.10.2022) தெளிவூட்டல் நிகழ்வு கொட்டகலை பகுதியில் இடம்பெற்றது.
மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் விதுர சம்பத் கலந்து கொண்டதோடு, பிரதேச கிராம சேவகர்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள், பிரதேச அபிவிருத்தி அதிகாரிகள், சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தி அதிகாரிகள், சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் பின் மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
” மனித அபிவிருத்தி ஸ்தாபனம் ஊடாக, மலையக பிரதேசங்களில் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு போசாக்கு தொடர்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைய பெருந்தோட்டங்களில் 40 வீதமானோர் பட்டினி கிடக்கின்றனர். எஞ்சிய 60 வீதமானோர் ஒருவேளை அல்லது இருவேளை உண்கின்றனர்.
கர்ப்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார் மற்றும் சிறார்களின் உணவு உட்கொள்ளதை எடுத்தால் நிலைமை மோசமாக உள்ளது.
இந்நிலையில் கொட்டகலை, நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துவருகின்றோம்.
உணவுப் பிரச்சினைக்கு தீர்வாக விவசாயம் ஊக்கு விக்கப்படுகின்றது. வீட்டும் தோட்டம் செய்ய விதைகள், கன்றுகள் என்பன வழங்கப்படுகின்றன. மறுபுறத்தில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார் மற்றும் சிறார்களுக்கு உணவு வழங்கும் திட்டம் இடம்பெறுகின்றது. “என்றார்.