Uncategorized
“வாடகை வீடு ஒன்றில் கஞ்சா செடி”
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிளக்பூல் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட இடம் ஒன்றை நுவரெலியா மீபிலிமான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (15.09.2022) மாலை சுற்றி வளைத்துள்ளனர்.
குறித்த பகுதியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 27 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பிளக்பூல் பகுதியில் அமைந்துள்ள வாடகை வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நுவரெலியா மீபிலிமான விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே வெளிநாட்டு கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டது கண்டறியப்பட்டது.
குறித்த கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட இடத்தில் ஐந்து மற்றும் ஏழு அடி உயரமான 70 தொடக்கம் 77 கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா செடிகள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது எனவும், வீட்டில் மூன்று அறைகளில் வளர்த்து வந்ததாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒப்புக்கொண்டார் என நுவரெலியா மீபிலிமான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
பொதுவாக நுவரெலியா பிரதேசத்தில் கடும் குளிரான காலநிலை காரணமாக கஞ்சா செடிகள் பயிரிட முடியாது எனவும், குறித்த சந்தேகநபர் உயர் மின்னழுத்த மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை பயன்படுத்தி வீட்டின் மூன்று அறைகளில் செயற்கையான சூழலை உருவாக்கி இந்த அயல்நாட்டு கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளார் எனவும் அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில், நுவரெலியா பிளக்பூல் பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா செடி வளர்க்கப்படுகிறதா என்றக் கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.