உள்நாட்டு செய்தி
நான் இன்று நாட்டும் மரத்தின் அறுவடையை எனக்கு அனுபவிக்க கிடைக்காது :ஜனாதிபதி
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆற்றிய அக்ராசன உரையின் போது இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
நாடு தற்போது பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், அனைவரும் ஒன்றிணைவதன் மூலமே அதனை முறியடிக்க முடியும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
பல வருட காலமாக தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியமை அத்தியாவசியமான விடயங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.
யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை இன்று (03) ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிடடார்..
அம்மக்களின் தீர்க்க வேண்டிய காணிப் பிரச்சினைகள் பல உள்ளன. வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக நாம் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் வாழுகின்ற இலங்கை தமிழ் மக்களுடன் நெருங்கிச் செயற்பட்டு, இலங்கையினை மீளக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு அவர்களது ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
1977 இல், அரசியலில் பிரவேசித்த நாள் முதல் எனக்கு தேவைப்பட்ட ஒரு விடயம் இவ்வாறான பிரிவுகளற்ற இலங்கையெனும் ஆளடையாளத்தைக் கொண்ட சமூகமொன்றினை உருவாக்குவதாகும். ஒருதாயின் பிள்ளைகளாக ஒற்றுமையாக வாழக்கூடிய தேசமொன்றை உருவாக்குவதாகும். இம்முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டதன் காரணமாக நான் அரசியல் ரீதியாக தோல்விகளை சந்தித்தேன். தோல்விகளை சந்தித்தேன். சிங்கள பேரினவாதிகளின் மாத்திரமன்றி, தமிழ், முஸ்லிம் பேரினவாதிகளின் விமர்சனங்களுக்கு ஆளானேன். இனவாதிகளுக்கும். சமயவாதிகளுக்கும் எதிராக தொடர்ச்சியாக ஈடுபட்டமையால் சில அரசியல் கட்சிகள் என்னை தேசத்துரோகியாகவும் சமய எதிரியாகவும் அவதூறுக்கு உட்படுத்தின
எனினும் நான் எனது கொள்கையில் இருந்து விலகிச் செல்லவில்லை. ஒருபோதும் நான் அந்தக்கொள்கையிலிருந்து விலகவும் மாட்டேன்.
இன்று இளம்பராயத்தில் பெரும்பாலானவர்கள் எனது அந்தக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் இனவாதத்திற்கும் சமயவாதத்திற்கும் எதிராக கோஷம் எழுப்புகின்றனர். சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் உள்ளிட்ட அனைத்து இனங்களுக்கும் சமத்துவமாக கவனித்தல் வேண்டும் என சிங்கள இளைஞர் யுவதிகள் கூறுகின்றனர். சுமார் ஐந்து தசாப்த காலமாக நான் இச்சமூகத்திற்கு விளங்கவைப்பதற்கு முயற்சித்த சத்தியத்தை இன்று இளம் பராயத்தினர் புரிந்துகொண்டுள்ளமையானது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்
இந்த இளைஞர் யுவதிகளின் ஒத்துழைப்புடன், முழு நாட்டையும் அக்கொள்கையின் பக்கம் ஒன்றுதிரட்டுவதற்கான வாய்ப்பு தற்போது எமக்கு கிடைத்துள்ளது. இன, மத, கட்சி, குலம் உள்ளிட்ட அனைத்து வேதங்களையும் ஒழிப்பதற்கு வாய்ப்புக்குக் கிட்டியுள்ளது. அந்த பேதங்கள் காரணமாக சில சமயங்கள் படுகின்ற துன்பத்தை ஒழிப்பதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. திறமை மற்றும் தேர்ச்சி மூலம் நபர்களின் எதிர்காலப் பயணத்தைத் தீர்மானிப்பதற்குகான அடித்தாளத்தை உறுதிப்படுத்துவதற்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. அனைத்துப் பிரசைகளும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை உருவாக்குவதற்கான பின்னணி ஏற்பட்டுள்ளளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்ஹ சுட்டிக்காட்டினார்..
எமது நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையாக காணப்படுகின்றன பெண்கள் இன்னமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், ஏனைய வித்தியாசங்கள், குறைபாடுகள் பலவற்றிற்கு முகம்கொடுத்து வருகின்றனர். இந்நிலையினை மாற்றியமைத்தல் வேண்டும். அதற்குத் தேவையான அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளை நாம் எடுக்க வேண்டியுள்ளது.
அவ்வாறே இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி என்பவற்றினை சமூகத்தில் இருந்து முழுமையாக ஒழிப்பதும் கட்டாயமான ஒன்றாகும். இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான தேசியக் கொள்கை ஒன்றினை நாம் அமுல்படுத்துவேன். இதற்குத் தேவையான சட்டதிட்டங்கள் நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுவரும் நிலையில் உள்ளன. அவ்வாறே சர்வதேச நாணய நிதியத்துடனும் ஊழல் ஒழிப்பு பற்றிய இணக்கப்பாடொன்றிற்கு வருவோம்.
இந்த அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதற்கு முழுமையான அரசியல் மறுசீரமைப்புத் திட்டமொன்று தேவைப்படுகின்றது. அந்த மறுசீரமைப்பை எனது பதவிக்காலத்தினுள் நான் மேற்கொள்வேன். எனினும் அது எனது தனிப்பட்ட அபிப்பிராயத்திற்கு அமைவாக அல்ல. இளைஞர்களின், பெண்களின் மற்றும் ஏனைய மக்களின் கருத்துக்களை அடிப்படையாக் கொண்டு மக்களினதும் பாராளுமன்றத்தினதும் இணக்கப்பாட்டிற்கு அமையவே அதனை மேற்கொள்வேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேற்கொள்ள வேண்டிய சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்கள் என்ன என்பது பற்றி தீர்மானிப்பதற்காக மக்கள் சபை ஒன்றினை நிறுவுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். அரசியல் கட்சிகள், நானாவித அமைப்புகள் மற்றும் இது தொடர்பாக ஆர்வம் காட்டுகின்ற அனைத்து நபர்களதும் கருத்துக்களை மக்கள் சபையின் ஊடாக விசாரிப்பதற்கான பொறிமுறை ஒன்றினை உருவாக்குவேன். இதற்காக கருத்துக்களைப் பெற்றுத்தருமாறு போராட்டத்துடன் தொடர்புடைய இளைஞர்களிடமும், தொடர்புபடாத இளைஞர்களிடமும் நான் முக்கியமாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.
எமது நாட்டின் ஜனாதிபதி முறைமையினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா? நாட்டிற்கு மிகவும் பொருத்தமான முறைமை எது? ஆட்சி முறையானது எவ்வாறான மறுசீரமைப்புகளுக்கு உட்பட வேண்டும்? உள்ளிட்ட அனைத்து விடயங்களும் மக்கள் சபையின் ஊடாக கலந்துரையாடப்படும். நாட்டிற்கு மிகவும் பொருத்தமான முறைமை தொடர்பாக தேசிய இணக்கப்பாடொன்றுக்கு வந்ததன் பின்னர் அம்முறைமையினை சட்டமாக வரைந்து நடைமுறைப்படுத்துவேன்.என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் உரையில் மேலும் தெரிவித்தார்..
இவ்வாறான தேசிய இணக்கப்பாட்டிற்கு வருவது கட்டாயமான ஒரு விடயமாகும். அதுபற்றி நான் சிறிது விளக்க விரும்புகின்றேன். நமது நாட்டில் பல சனாதிபதி தேர்தல்களின் போது முன்வைக்கப்பட்ட பிரதான வாக்குறுதி தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப்படும் என்பதாகும். எனினும் அந்த வாக்குறுதியை வழங்கி அதன் மூலம் அதிகாரத்திற்கு வந்த எவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவில்லை. மாறாக ஒருவர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழித்தாலும், அதன் பின்னர் ஆட்சிக்கு வரும் கட்சியினால் மீண்டும் அதனை மாற்றியமைக்கும் இயலுமை உள்ளது என்பதையும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதனால் தான் நாங்கள் மக்கள் சபை ஊடாக பொதுவான தேசிய இனக்கப்பாடு ஒன்றிற்கு வரவேண்டிய தேவையுள்ளது.
மக்கள் சபை என்பது முழுமையாக சுயாதீனமாக செயற்படும் ஒரு நிறுவனமாகும். அரசாங்கம் அதற்குத் தேவையான வளங்களை வழங்குவதை மாத்திரமே மேற்கொள்ளும். அதன் பணிகளுக்கு அல்லது தீர்மானங்களுக்கு அரசாங்கத்தின் விதவித தாக்கமும் இருக்காது. மக்கள் சபையின் அமைவு பற்றி நாம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி தீர்மானிப்போம்.
சாதாரண சமூகமொன்றிற்கான தேசிய இணக்கமானது தற்போதும் கூட, மக்கள் சபை பற்றி கருத்துக்கள் மற்றும் பிரேரணைகள் என்பவற்றினை எமக்குப் பெற்றுத்தந்துள்ளன.
மக்கள் சபையின் பணிகளை மிகவும் முறைப்படுத்துவதற்காகவும் மற்றும் வினைத்திறன்மிக்கதாக அமையும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபை போன்ற பல்தரப்பு அமைப்புகளின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பினை வழங்குவேன். அவதானிப்புகள் அல்லது தொழில்நுட்ப ஆலோசனை மட்டத்தில் அவ்வாறான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் சபைக்கு வாய்ப்பு உள்ளது.
நான் இதற்கு முன்னரும் சபையில் குறிப்பிட்டது போன்று பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களை உடனடியாக நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
அந்த குழுக்கள் ஊடாகவும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புக் கிட்டும். சாதாரண சமூகமொன்றிற்கான தேசிய இயக்கம் இது தொடர்பாக சமர்ப்பித்த அறிக்கையினை நான் ஏற்கனவே இச்சபையில் சமர்ப்பித்துள்ளேன்.
அவ்வாறே அரசியல் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய சபை ஒன்றினை நிறுவுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். முன்னெடுக்கும் நோக்கில் அனைவரினதும் ஆகக் குறைந்த பொது இணக்கப்பாடொன்றுடன் கூடிய வேலைத்திட்டம் ஒன்றினை இந்த தேசிய சபையின் ஊடாக தயாரித்துக்கொள்ள எம்மால் முடியும்.
பேதங்கள் மூலம் எமது நாடு முற்காலம் தொட்டு பின்னடைவுகளுக்கு உள்ளானது. நாம் இன ரீதியாக பிரிந்தோம், மொழி ரீதியாக பிரிந்தோம், சமய ரீதியாக பிரிந்தோம். கட்சி ரீதியாக பிரிந்தோம். வகுப்பு ரீதியாக பிரிந்தோம், பூகோள ரீதியாகவும் பிரிந்தோம் குல ரீதியாகவும் பிரிந்தோம்.
சில தரப்பினர்கள் இப்பிரிவினை மேலும் விஸ்தரித்தனர். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான பிளவுகளை பயன்படுத்தினர். பிரித்து ஆள்வதன் அனுகூலத்தை அனுபவித்தனர். முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கினர்.
தமிழ், மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கினர். இவ்வாறு இன ரீதியாவும் சமய ரீதியாகவும் பல்வேறு விதமான பிளவுகளை ஏற்படுத்தி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு முயற்சித்தனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வரிசையில் காத்திருக்காது சமையல் எரிவாயுவை இன்னும் சில தினங்களில் அனைவராலும் பெற்றுக்கொள்ள முடியும். உணவுத் தட்டுபாடொன்று ஏற்படாதவாறு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றினைக் கொள்வனவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதித் துறை என்பவற்றிற்கு ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
மீளெழும் முயற்சியிலே எமது அயல் நாடான இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பாக நான் விசேடமாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான இந்திய அரசாங்கம் எமக்கு வழங்கிய உயிர் மூச்சுக்கு நான் இலங்கை மக்கள் சார்பாக மோதி பிரதமர் அவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என்று தெரிவித்த ஜனாதிபதி:
தற்போது எமது முன்னால் உள்ள குறுங்கால பிரச்சினை அமைவது எரிபொருள் தட்டுப்பாடாகும். எரிபொருளை கொண்டு வருவதற்காக ஏனைய நாடுகளிடமிருந்து கடன் உதவிகள் கிடைக்கும் வரையில் காத்திருக்கும் முறைமையிலே நாம் முடிவுக்கு கொண்டு வருதல் வேண்டும் எனவே எமது நாட்டின் ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று ஊடாக எரிபொருளை கொண்டு வருவதற்கான முறைமை ஒன்றினை நாம் ஆரம்பிக்க உள்ளோம். இதன் போது எரிபொருளுக்கான கொடுப்பனவினை சமப்படுத்திக்கொள்வதற்காக தேர்ந்தெடு இறக்குமதிகளை வரையறுத்துக்கொள்ள வேண்டியும் எமக்கு ஏற்படும.; மறுபுறமாக எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியும் ஏற்படும். எனவே இந்த ஆண்டின் இறுதி வரையில் இந்த கஷ்டத்தினை நாட்டுக்காக நாம் தாங்கிக்கொள்ளல் வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாம் அனைவரும் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றோம், துன்பப்படுகின்றோம், சிக்கல்களுக்கு ஆளாகின்றோம்.
இவ்வாறான துன்பங்கன்பவற்றிலிருந்து விடுபடுவதற்கான பாதையை நோக்கி இந்நாட்டினைக் கொண்டுசெல்வதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் நான் நடவடிக்கை எடுப்பேன்.
மீண்டும் ஒருபோதும் எமது நாட்டிலே இவ்வாறான பொருளாதார நெருக்கடியொன்று ஏற்படாதவாறு பலமிக்க அடித்தாளமொன்றினை இடுதல் வேண்டும். பொருளாதாரத்தை நவீனமயப்படுத்துதல் வேண்டும். பொருளாதார ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்தி, போட்டித்தன்மைமிக்க சந்தைப் பொருளாதாரம் ஒன்றின் பக்கம் மாற்றியமைத்தல் வேண்டும். அவற்றிற்குத் தேவையான அறிக்கைகள், திட்டமிடல், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றினை தற்போது நாம் தயாரித்து வருகின்றோம என்றும் குறிப்பிட்டார்.
நாம் நடைமுறைப்படுத்தும் செயல்திட்டங்கள் என்பவை தொடர்பான விபரமான தகவல்கள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் இடைக்கால வரவுசெலவு மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்படும்.
மீளெழுச்சிபெறும் ஆரம்பக் கட்டமொன்றாக நாம் சர்வதேச நிதியத்தோடு நான்கு வருட வேலைத் திட்டமொன்று தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பித்தோம். ஆகஸ்ட் மாதத்திலிருந்து நாம் அந்த கலந்துரையாடல்களை மீணடும் முன்னெடுத்துச் செல்வோம். ஆரம்ப கட்ட உயர்மட்டத்திலான கலந்துரையாடல்களைச் துரிதமாகவும் சிறப்பான முறையிலும் முடிப்பது எமது எதிர்பார்ப்பாகும்.
சர்வதேச நிதியம் மற்றும் சட்ட நிபுணர்களான லசாட் மற்றும் கிளிபட் சான்ஸ் நிறுவனங்களோடு சேர்ந்து கடன் நிலைபடுத்தும் திட்டம் தற்போது முடியுறும் தறுவாய்க்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை இன்னும் சில தினங்களில் நாம் சர்வதேச நிதியத்திடம் முன்வைப்போம். அதன்பின்பு எமக்கு கடன் உதவிகள் வழங்கியுள்ள நாடுகளோடு கலந்துரையாடுவோம். அதன்பின்பு தனியார் கடனாளிகளோடும் கலந்துரையாடல்களை ஆரம்பிப்போம். அவர்களோடு உடன்பாட்டுக்கு வருவோம்.
பொருளாதாரத்தை நிலைபேறுடையதாக்கும் முயற்சியின்போது சமூகத்தின் வலுவற்ற மற்றும் நிர்க்கதியானோர் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துவோம். நாட்டின் தொழில்முயற்சியாளர்களுக்கு தங்களது ஆற்றல்களினூடாக முன்வருவதற்குத் தேவையான வழிகளை மேலும் விரிவுபடுத்துவதோடு சமூகத்தில் கீழ்மட்டத்தில் வசிக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுப்போம். நாடுபூராகவும் வசிக்கும் ஏழை மக்களுக்கு குறுகியகால நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நீண்டகால வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். நான் சமூக மாற்றங்களுக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவேன்.
நான் எதிர்காலத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நேர்மறையான சமூக மாற்றங்களுக்காக அர்ப்பணிப்பேன். மீண்டும் விரிவான நடுத்தர வர்க்கத்தினரை உருவாக்குவதற்குத் தேவையான அடிப்படையை உருவாக்குவேன். சமூக சந்தைப் பொருளாதாரம் ஒன்றின் ஊடாக நன்மைகள் முழு சமூகத்திற்கும் நியாயமானவாறு பெற்றுக்கொடுப்பேன்.
இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபடும்போது சம்பிரதாய சிந்தனையிலிருந்து விடுபடுமாறு நான் சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். வெறுமனே அதிக வட்டிக்கு வர்த்தகக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும்போது அமைதியாகப் பார்த்திருந்த சில குழுக்கள் நாட்டுக்கு பொருத்தமான முதலீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பொய்யான பலிக்கடாக்களை உருவாக்கி மக்களை திசைதிருப்புகின்றார்கள்.
இந்தியாவோடு ஒன்றிணைந்து திருகோணமலை எண்ணெய்த்தாங்கித் தொகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும்போது இந்தியாவுக்கு இலங்கையை விற்கின்றார்கள் என்று கூறி அபிவிருத்தித் திட்டத்துக்கு இடையூறு விளைவித்தனர். அன்று எமக்கு எண்ணெய்த்தாங்கித் தொகுதியினை அபிவிருத்தி செய்துகொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பின் இன்று மக்களுக்கு எரிபொருள் வரிசைகளில் நீண்டநாட்கள் அலைவதற்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.
சுவசெரிய நோய் காவு வண்டிகளின் சேவையை ஆரம்பிக்கும்போது அதேபோன்று எதிர்ப்புகளைச் செய்தார்கள். சுவசெரிய நோய் காவு வண்டிகள் வைத்தியசாலைகளுக்கு வந்தால் ஏற்படுவது மரணம் எனக்கூறி சில வைத்தியர்கள் ஊடகக் கலந்துரையாடல்கள் நடத்தினார்கள். ஆனாலும் நாம் எவ்வாறாயினும் சுவசெரியவை ஆரம்பித்ததனால் தற்போது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களை வழிதவறி நடத்தி தடைசெய்த கருத்திட்டங்கள் காரணமாக எமது பொருளாதாரக் கட்டமைப்பு அழிவடைந்தது என்றும் ஜனாதிபதி கூறினார்.
இலகு புகையிரதச் சேவையைத் தாபிப்பதற்கும், துறைமுகத்தை மேம்படுத்துவதற்கும் ஜப்பான் நாடு முன்வந்த சந்தர்ப்பத்தில் அதற்கெதிராக அடிப்படையற்ற வீணான காரணிகள் பலவற்றை எடுத்துக்காட்டியதன் காரணமாக எமது நாட்டுக்குக் கிடைப்பதற்கிருந்த 3 பில்லியன் டொலருக்கு 8
அதிகமான அளவு கிடைக்காமல் போயிற்று. அதுமட்டுமன்றி ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையே இருந்த நீண்டகால நட்பு சிதறிப்போனது என்றும் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டளவில் ஆரம்ப நிலை வரவுசெலவுத் திட்டத்தில் மிகை ஒன்றினை ஏற்படுத்துவது எமது முயற்சியாகும். பொருளாதார அபிவிருத்தி வேகத்தை நிலையான தன்மைக்கு உயர்த்துவதும் நமது முயற்சியாகும். 2026 ஆம் ஆண்டாகும் போது நிலையான பொருளாதார அடிப்படை ஒன்றினை உருவாக்கிக் கொள்வது எமது எதிர்பார்ப்பாகும் தற்போது அரச கடன் அளவானது மொத்த தேசிய உற்பத்தியின் நூற்றுக்கு 140 சதவீதம் ஆகும். இதனை 2032 ஆம் ஆண்டளவில் மொத்தத் தேசிய உற்பத்தியில் நூறு சதவீதத்தை விடவும் குறைப்பது எமது திட்டமாகும்.
அவ்வாறு தேசிய பொருளாதாரக் கொள்கையின் ஊடாக நாட்டினையும,; நாட்டு மக்களையும் கட்டியெழுப்பும் செயற்பாட்டினை முன்னெடுத்துச் சென்றால், 2048 ஆம் ஆண்டிலே சுதந்திர தின நூற்றாண்டினைக் கொண்டாடும்;போது, முழுமையான அபிவிருத்தி அடைந்த ஒரு நாடக எம்மால் மாற முடியும்.
நான் இவ்வாறான நீண்டகால இலக்குகளுக்குத் திட்டங்களைத் தயாரிக்கும்போது சிலர் பரிகாசமாகப் பார்க்கின்றார்கள். கேலிக்கதைகள் சொல்கின்றனர். ஆம். நான் ஏனைய அரசியல்வாதிகள் போன்றவர் அல்ல. என்னிடம் இருப்பது நீண்டகாலத் திட்டங்கள்.நான் திட்டமிடுவது எனது முன்னேற்றத்துக்காக அல்ல. இளைஞர் சமுதாயத்துக்காகவே. நாளைய நாளுக்காகவே. நான் இன்று நாட்டும் மரத்தின் அறுவடையை எனக்கு அனுபவிக்க கிடைக்காது என்பதை நான் நன்றாக அறிவேன். ஆனாலும் நாளைய தினம் எமது பிள்ளைகளான எதிர்காலப் பரம்பரைகள் அந்த அறுவடையை அனுபவிப்பார்கள்.
இன்று ஏற்பட்டுள்ளது என்ன? அரசியல் முறைமை மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான மக்களது நம்பிக்கை அற்றுப்போய்விட்டது. அரசியல் பொறிமுறை தொடர்பான மக்களது எதிர்பார்ப்புகள் உடைந்துபோயுள்ளன. கடந்தகாலம்பூராகவும் எதிர்ப்பில் ஈடுபட்ட மக்கள் இந்த முறைமைத்தொகுப்பின் மாற்றத்தை கேட்டு நின்றது அதற்காகத்தான்.
இலங்கை நாட்டையும் நாட்டு மக்களையும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சகல மாற்றங்களையும் செய்வதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். நாடு கேட்கும் சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளை நான் நடைமுறைப்படுத்துவேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் உரையில் மேலும் தெரிவித்தார்..