Connect with us

உள்நாட்டு செய்தி

அவசரகால சட்டம் நிறைவேற்றம்

Published

on

பாராளுமன்றத்தில் இன்று (27) மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவசரகால நிலை பிரகடனம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

அவசரகால நிலை பிரகடனத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் 2022.07.17ஆம் திகதியன்று செய்யப்பட்ட பிரகடனத்தின் மூலம் மேற்படி கட்டளைச்சட்டத்தின் IIஆம் பகுதியின் கீழ் இலங்கை முழுவதும் 2022.07.18ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருவதாக அப்போதைய பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலே சொல்லப்பட்ட பிரகடனத்தை மேற்கொள்வதற்கான காரணம் மக்களிடையே அமைதியைப் பாதுகாத்தல், பொது மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைக் கொண்டு நடத்துவதற்காகவெனவும் அரசியலமைப்பின் 155வது உறுப்புரையின் 4வது துணை உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பதாகவும் அப்பிரகடனத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்துக்கு அமைய இந்தப் பிரகடனத்துக்கு 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் அனுமதி கிடைக்கப்பெற்றால் ஒரு மாத காலத்துக்கு நடைமுறைப்படுத்தலாம்.

பதின்நான்கு நாட்களுக்குள் இந்தப் பிரகடனத்துக்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்கப் பெறாவிட்டால் அது இரத்தாகும்.

அத்துடன், ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒரு முறை அவசரகால நிலைமை பாராளுமன்றத்தின் அனுமதியுடன் நீடிக்கப்பட முடியும்.