Connect with us

Uncategorized

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு…

Published

on

பொகவந்தலாவ மேற்ப்பிரிவு தோட்ட பகுதியில் உள்ள 17 ஆம் இலக்க வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற நான்கு பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூன்று பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

17 ஆம் இலக்க வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற போது மரத்தில் இருந்த குளவி கூட்டினை கழுகு ஒன்று தாக்கியதால் குளவிகள் இவ்வாறு கலைந்து வந்து இவர்களை கொட்டியுள்ளது.

குளவி கொட்டினால் பாதிக்கப்பட்ட நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும்  அதில் ஒருவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவத்தில் பொகவந்தலாவ கீழ் பிரிவு தோட்டத்தை சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிக்கன் பத்மநாதன் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, குளவி கொட்டுக்கு உள்ளான மற்றைய மூன்று பேரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(க.கிஷாந்தன்)