உள்நாட்டு செய்தி
பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்: பிரதமர்
அனைவருக்கும் மூன்று வேளை உணவு வழங்கும் முறையை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேவைப்படுபவர்களுக்கு மானியம் வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாக பிரதமர் கூறுகிறார்.
பாராளுமன்றத்தில் இன்று(07) பிரதமர் ஆற்றிய விசேட உரையில் உள்ளடங்கிய விடயங்கள்…
”இந்த நிலையிலிருந்து நாட்டை உயர்த்த பாரம்பரிய வழிகளிலிருந்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை குறுகிய காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியில் முழு நாட்டு மக்களும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும். நாட்டிற்காக நாம் அனைவரும் ஆற்றவேண்டிய பங்கு உள்ளது.
இங்கு எமது முதன்மையான கவனம் பொருளாதார ஸ்திரத்தன்மையில் உள்ளது. ஆனால், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் மட்டும் நாம் இந்நிலையிலிருந்து மீள முடியாது. நம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.
இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், உதவி வழங்கும் நாடுகளில் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளே முன்னணியில் இருக்கின்றது என்றார்.
இரண்டு ஹெக்டேயருக்கும் குறைவான காணியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் பெற்றுக்கொண்டுள்ள விவசாயக்கடன் இரத்துச் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், மாற்று சிந்தனையில் யோசிப்போம்.
நம் நாடு இப்போது செயலிழந்த கணனி போன்றுள்ளது. அதனை மறுசீரமைக்க வேண்டும். அது இயங்கத் தேவையானவற்றை பொருத்துவதற்கு முன்னர், அதனை மறுசீரமைக்க வேண்டும். அதனையே நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். இன்றேல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது” என்றார்.