உள்நாட்டு செய்தி
பொருளாதார நிலை குறித்து IMF அறிக்கை
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தொடர்பான தனது Article iv அறிக்கையை நேற்று (25) வெளியிட்டது.
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து நீண்ட ஆய்வுக்கு பின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொதுக் கடன் நிலைத்தன்மையை மீட்பதற்கு நம்பகமான மற்றும் தெளிவான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அவசர நடவடிக்கை தேவை என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதன் மூலம் வறுமையைக் குறைக்க சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், வருமானத்தை மேம்படுத்த வரிகளை உயர்த்த வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் கடனுக்கு இடையிலான விகிதம், வரி குறைப்பு காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாக 95 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியும் இதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டு பின்னர் அந்த அறிவிப்பை மீளப்பெறுவதாக தெரிவித்திருந்தது.
மத்திய வங்கி தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை ஆய்வு செய்து விளக்கம் அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.