உள்நாட்டு செய்தி
இன்னும் நான்கு நாட்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு முடிவுக்கு கொண்டுவரப்படும்
இன்னும் நான்கு நாட்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது நாளாந்தம் 120,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன.
மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சமையல் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக தற்போது காணப்படுகின்ற வரிசைகள் நாளை காலையுடன் முடிவடையும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கும், மீன்பிடி மற்றும் உணவகங்களுக்கும் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தெமட்டகொட மற்றும் மருதானை பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நேற்று இரவு இடம்பெற்றது. மருதானை மற்றும் தெமட்டகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் கோரிக்கைக்கு அமையவே இது இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் இந்த எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இங்கு சுமார் ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு 07, பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் எரிவாயு சிலிண்டர்கள் இன்று வழங்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், கொழும்பு 01 முதல் 15 வரையில் உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் மிக விரைவில் சமையல் எரிவாயுகள் விநியோகிக்கப்படும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி கூறினார்.
இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனத்திடம் தற்போது 10 நாட்களுக்கு போதுமான அளவு எரிவாயு கையிருப்பு காணப்படுகின்றது. அத்துடன், 03 எரிவாயு கப்பல்களுக்கு தேவையான 10 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.