உள்நாட்டு செய்தி
பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோரிக்கை
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அந்நாட்டின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் இன்று கோரிக்கை விடுத்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் , இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இலங்கை எதிர்நோக்கியுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து, ஒரே சமூகமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதே அரசின் இலக்கென இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை முன்னெடுத்து செல்லும் வேலைத்திட்டங்களின் அடைவு மட்டம், மிகுந்த முன்னேற்றத்தைக் காட்டுவதாக தாரிக் அஹமட் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.