உள்நாட்டு செய்தி
கூட்டு ஒப்பந்தம் தான் தோட்டத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கவசம்: CWC
கூட்டு ஒப்பந்தம் தான் தோட்டத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஆயுதம். இதனை ஏனைய தொழிற்சங்கங்களும் உணர்ந்துள்ளன. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயம் கிட்டும் வரை நாம் ஓயப்போவதில்லை. என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான பழனி சக்திவேல் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தோட்டக் கம்பனிகளின் கெடுபிடிகளைக் கண்டித்தும், தமக்கான தொழில் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுமே அவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் விசேட பிரதிநிதியாக சக்திவேல் போராட்டக்களம் புகுந்து, தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.