உள்நாட்டு செய்தி
கொழும்பு – கண்டி பிரதான வீதி தொடர்ந்தும் மூடல், திறப்பது தொடர்பில் நாளை முடிவு
கொழும்பு – கண்டி பிரதான வீதியை மீண்டும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவிக்கின்றார்.
பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாகவே, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு 10 மணி முதல் குறித்த வீதியூடான போக்குவரத்தை தடை செய்ய தீர்மானிக்கப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் 1 மணியுடன் வீதியை திறக்க இன்று காலை தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த வீதி ஊடாக இலகு ரக வாகன போக்குவரத்துக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
எனினும், குறித்த பகுதியில் தற்போது கடும் மழையுடனான வானிலை நிலவி வருகின்றமையினால், பஹல கடுகண்ணாவ வீதியை மீண்டும் மூடுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வீதியை மீள திறப்பது தொடர்பிலான கலந்துரையாடல் நாளை முற்பகல் 9 மணிக்கு இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.
பஹல கடுகண்ணாவ ஊடாக கொழும்பு – கண்டி பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.