உள்நாட்டு செய்தி
சம்பந்தன்-ஹக்கீம்-மனோ நேரடி கலந்துரையாடல்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் இடையே நேரடி கலந்துரையாடல், கூட்டமைப்பு தலைவரின் கொழும்பு இல்லத்தில் நடந்தது.
இதன்போது, கடந்த 2ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் உரையாடல் தொடர்பாக ஹக்கீமும், மனோவும், கூட்டமைப்பு தலைவருக்கு எடுத்து கூறினர். இதில் வடக்கு கிழக்கின் முன்னணி கட்சியான தமிழரசு கட்சியும், சிரேஷ்ட தலைவராக சம்பந்தனும் கலந்துகொள்வதை தாம் விரும்புவதாக மனோ, ஹக்கீம் இருவரும் வலியுறுத்தி கூறினர்.
தமிழ், முஸ்லிம் கட்சிகளின் மத்தியில் பொதுவான ஒரு தளம் ஏற்படுவதன் அவசியத்தை ஏற்றுக்கொண்ட சம்பந்தன், 13ம் திருத்தம்தான் இந்நாட்டு அரசியலமைப்பில் இடம்பெற்ற ஒரே அதிகார பரவலாக்கல் சட்டம். ஆனால், 13ம் திருத்தம் முடிவல்ல, ஆரம்பம். அது தீர்வல்ல. அது ஒரு அஸ்திவாரம். அதிலிருந்து கட்டிடம் கட்டப்பட வேண்டும் என கூறினார்.
ஈழத்தமிழர், முஸ்லிம்கள், மலையகத்தமிழர் ஆகிய எல்லோரும் சிங்களவர்களுடன் சேர்ந்து தாம் இலங்கையர் என உணரும் அடிப்படையில், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முறையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கூறினார்.