Connect with us

உள்நாட்டு செய்தி

“அனைத்துக்கும் முன் குழந்தைகள்”- இன்று சிறுவர் மற்றும் முதியோர் தினம்

Published

on

உலகலாவிய ரீதியில இன்று சிறுவர் மற்றும் முதியோர் தினம் கொண்டாடப்படுகின்றது.

இலங்கையில் “அனைத்துக்கும் முன் குழந்தைகள் “என்ற தொனிப் பொருளில் இந்த முறை சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.

சிறுவர் தின தேசிய நிகழ்வு கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன மற்றும் வெகுசன ஊடகத் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், அனைத்துச் சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள் அதிகரித்துள்ளன. பாடசாலை வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் என்பன, இன்னமும் எமது பிள்ளைகளுக்குத் தொலைதூரமாகியுள்ளன. எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ள அந்த அனைத்து எதிர்பார்ப்புகளையும், மிகவும் பாதுகாப்பாக மீளப் பெற்றுக்கொடுப்பதே, அரசாங்கத்தின் முதல் கடமையாக உள்ளது. சிறுவர்களின் உலகத்தை அவர்களுக்கு மிக விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கே. எங்களுடைய ஒட்டுமொத்தத் திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

தமது பிள்ளைகள் மிகச் சிறந்தவர்களாக சமூகமயப்படும் போது, அதனால் திருப்தியடையப் போவது அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மாத்திரமல்ல. அந்த சந்தோஷம், நாட்டின் ஒட்டுமொத்த மனிதச் சமுதாயத்துக்கும் கிடைக்கிறது. அவ்வாறான அனுபவங்கள் உலகில் ஏராளம் உள்ளன. அவ்வாறான சந்தர்ப்பங்கள் எதிர்காலத்திலும் உருவாகுவது நிச்சயம். அதனால், பெரியோர்களாகிய நாம், நல்லொழுக்கமுள்ள குழந்தைகள் தலைமுறையை இந்த நாட்டுக்கும் உலகத்துக்கும் வழங்க வேண்டுமாயின், அந்தக் குழந்தைகளின் அறிவு, மனப்பான்மை மற்றும் திறன்களை நிறைவுசெய்யத் தேவையான பின்னணியை அமைத்துக் கொடுப்பது கட்டாயமாகும்.

பெற்றோர் எப்போதும் கருதும் “அனைத்துக்கும் முன் குழந்தைகள்” என்ற எண்ணக்கருவே, இம்முறை உலக சிறுவர் தினத்தின் கருப்பொருளாகவும் அமைந்திருக்கிறது. முற்போக்கான அரசாங்கம் என்ற வகையில், பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்குள் குழந்தைகளுக்குத் தேவையான சேவைகள், வசதிகள் மற்றும் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது, “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தின் ஊடாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதை யதார்த்தமாக்குவதே எனது நோக்கமென்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சமூகமயமாக்கல் செயற்பாட்டில் முன்னோடியாக இருக்கும் அனைத்து வகையான பெரியோர்களும், சிறுவர்கள் தொடர்பான பொறுப்புக்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த வகையில், குழந்தைகளுக்கு உரித்தான குழந்தைப் பருவத்தை அவர்கள் சுதந்திரமாக அனுபவிக்க இடமளிக்குமாறு, உங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். அந்தப் பருவத்தை ஒருபோதும் நாம் மீளப்பெற முடியாது.

இம்முறை உலக சிறுவர் தினத்தையும், தொற்றுப் பரவல் நிலைமை காரணமாகச் சிறுவர்களால் கொண்டாட முடியாதுள்ளது. இருப்பினும், வீடுகளில் இருந்தவாறே மகிழ்ச்சியாக அவர்கள் அதைக் கொண்டாட ஆசிர்வாதமளிக்கிறேன். உங்கள் அனைவருக்கும், சுபீட்சமான எதிர்காலம் அமையட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குவது அனைத்து மனித வர்க்கத்தினரதும் கட்டாய கடமையாகும். பெரியவர்களுக்கு அக்கடமையை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படும் ´உலக சிறுவர் தினத்தை´ முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

குழந்தைகளினாலேயே உலகம் அழகாகின்றது. அத்துடன் நாட்டினது எதிர்காலம் போன்றே உலகத்தின் எதிர்காலமும் குழந்தைகளிலேயே தங்கியுள்ளது. சிறுவர்களின் உலகம் பெரியோரது உலகத்தைவிட மிகவும் அழகானது. அந்த அழகை அவர்கள் எவ்வித தடையுமின்றி அனுபவிப்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது பெரியோர்களது கடமையாகும்.

இதனை நன்கு புரிந்துக் கொண்ட ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சிறுவர்களின் உரிமைகளை உறுதிபடுத்துவதற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம். நல்லொழுக்கம் மற்றும் ஆற்றல் நிறைந்த சிறுவர் தலைமுறை எதிர்காலத்தின் இருளை நீக்கும் என்பது எமது நம்பிக்கையாகும். சிறுவர் உரிமைகளை உறுதிபடுத்துவதற்கு நாம் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாகவும் உறுதி பூண்டுள்ளோம்.

அதற்கமைய கடந்த காலங்களில் பாடசாலை கல்வியை கட்டாயமாக்குதல் மற்றும் சிறுவர் அடிமைத்தனத்தை சமூகத்திலிருந்து இல்லாதொழித்தல் போன்றவை குறித்த பல சட்டங்களை திருத்த கிடைத்தமை நாம் பெற்ற வெற்றியாகும்.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக உலகின் பிற நாடுகள் போன்றே நமது நாட்டு சிறுவர்களது குழந்தை பருவமும் மிகுந்த சிக்கலாகியுள்ளது. சுதந்திரமாக ஓடித் திரியும் சுதந்திரத்தை இழந்து வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதானது சிறுவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

அதனால் உலகளாவிய தொற்று நிலைமை காணப்படும் இவ்வாறானதொரு சூழ்நிலையில் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகாத வகையில் அவர்களை பராமரித்துக் கொள்வது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு பெற்றோர்களிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன், விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு முன்னுரிமை அளித்து அதனை துரிதகதியில் நிறைவுசெய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சுடன் இணைந்து நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் படைப்புக்களை வெளிக்காட்டுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

´அனைத்திற்கும் முன்னுரிமை பிள்ளைகள்´ எனும் தொனிப்பொருளில் இலங்கையில் இம்முறை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினத்தின் இலக்கினை அடைவதற்கு அனைவரையும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன். மேலும் சிறுவர்களின் உலகை நாம் அழகுபடுத்துவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *