உள்நாட்டு செய்தி
தாழமுக்கம் – சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் தெற்மேற்குப் பகுதியில் உருவான பவன தாழமுக்கம் பற்றி வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.
இந்தத் தாழமுக்கம், அடுத்த 24 மணித்தியாலங்களில் புயலாக மாறலாம். அது வடமேற்குத் திசையில் நகர்ந்து, தீவிர புயலாக தமிழ் நாட்டை தாக்கலாம் என அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வடக்கு கிழக்கு கடல் சடுதியாக கொந்தளிக்கலாம். காற்றின் வேகம் திடீரென மணிக்கு 80 முதல் 100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.
புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். அடுத்து வரும் நாட்களில் இரண்டு முதல் மூன்று மீற்றர் வரை உயரமான அலைகள் எழுவதுடன், மன்னாரில் இருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கரையோரங்களில் கடல் அலைகள் கரையைத் தாண்டி தரைக்குள் வரும் சாத்தியமும் உள்ளதென திணைக்களத்தின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தில் இருந்து கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும், இந்தக் கடற்பரப்புக்களில் இருப்பவர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.