உலகம்
ஆப்கானிய பெண் நீதிபதிகள் போராட்டம்
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விரைவில் புதிய ஆட்சி உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர்.
அனைத்து ஆப்கானிஸ்தான் மாகாணங்களுக்கும் கவர்னர்கள், அதிகாரிகள் ஆகியோரை நியமித்து வருகின்றனர்.
பதவியேற்பு நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
அவர்களது ஷரியா சட்டம் மூலமாக ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி நடைபெறும்.
இந்த சட்டங்களை முறையாகக் கடைபிடிக்க பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த இருபது ஆண்டு காலமாக அமெரிக்க அரசின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டை ஆட்சி செய்து வந்துள்ளனர்.
அப்போது நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் சிறை தண்டனையை அனுபவித்து வந்தனர்.
தற்போது தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குற்றவாளிகளுக்கு அரசாங்கத்தில் முக்கிய பதவிகளையும் தாலிபான்கள் வழங்கி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் நீதிமன்றத்தில் நீதிபதிகளாகப் பதவி வகித்த பெண்கள் பலர் தற்போது இதனால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர்.
தங்களால் ஒரு காலத்தில் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தற்போது தாலிபான்கள் ஆதரவுடன் வெளியில் சுதந்திரமாக உலா வருகின்றனர்.
அவர்கள் தங்களுக்கு தண்டனை வழங்கிய 250 பெண் நீதிபதிகளை பழிவாங்க துடிக்கின்றனர்.
இதனால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறி பெண் நீதிபதிகள் நாட்டை விட்டு தப்பித்துச் செல்ல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சம உரிமை அனைத்துமே மறுக்கப்படுகிறது.
அரசாங்கத்தில் முக்கிய பணிகளில் ஆண்களே அமர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.