உள்நாட்டு செய்தி
நோட்டன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் இரண்டு கடைகள் முற்றாக சேதம்
நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோட்டன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் இரண்டு கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் 12.08.2021 அன்று தியகல நோட்டன் பிரதான வீதியில் நோட்டன் நகரத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
மண்சரிவு ஏற்படும் போது கடையில் இருந்த நபர் வெளியில் சென்றுள்ளதனால் அவர் மயிரிழையில் உயிர்த்தப்பியுள்ளார்.
இந்த மண்சரிவு காரணமாக கடையில் இருந்து தளபாடங்கள், குளிர்சாதன பெட்டி உட்பட அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளன.
அட்டன் காசல்ரீ வீதியூடாக நோட்டன்பிரிட்ஜ் பகுதிகான பொது போக்குவரத்து பாதை மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் விதுலிபுர பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இந்த வீதி ஊடான போக்கு சுமார் மூன்று மணித்தியாலங்கள் முற்றாக தடைப்பட்டன.
அதனை தொடர்ந்து நோட்டன் பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து வீதியில் சரிந்து கிடந்த கற்களையும் மண்ணையும் அகற்றியதனை தொடர்ந்து குறித்த பாதையின் பொது போக்குவரத்து வழமைக்கு திரும்பின.
குறித்த பகுதியில் மண்சரிவுடன் பிரதேசத்திற்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த பாரிய இரண்டு கொங்கிரிட் குடிநீர் தாங்கிகளும் மண்ணுடன் அல்லூண்டு சென்றுள்ளன.
இதனால் நோட்டன்பிரிஜ் பகுதியில் உள்ள பல வீடுகளுக்கு குடிநீர் இல்லாது போயுள்ளன.
இதே வேளை குறித்த பாதையில் பல இடங்களில் மண்சரிவு அபாயமும் நிலவி வருவதனால் இந்த வீதியினை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு நோட்டன் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.