உள்நாட்டு செய்தி
வேலை செய்யும் குறைந்தபட்ச வயதெல்லை 18 ஆக உயர வேண்டும் – மனோ
வேலைக்கு அமர்த்த கூடிய குறைந்தபட்ச வயதெல்லை, 14ல் இருந்து 16 ஆக இவ்வருடம் ஜனவரி மாதம் உயர்த்தப்பட்டது. வேலை செய்யும் குறைந்தபட்ச வயதெல்லை 18 ஆக உயர வேண்டும். தற்சமயம் இது தொடர்பில் அமைச்சரவையில் பத்திரம் சமர்பிக்க்பட்டுள்ளதாக அறிகிறேன். இது ஒரு நல்ல காரியம். இதை செய்யுங்கள். சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வாருங்கள். தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாங்கள் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்குகிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இன்று பாராளுமன்றத்தில் உரையாடிய போது கூறினார்.
குறைந்தபட்ச சம்பளம் தொடர்பில் திருத்த சட்டமூலத்தின் மீது பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது…
கேகாலை, இரத்தினபுரி, கண்டி, கொழும்பின் அவிசாவளை, களுத்துறை, மாத்தளை, ஆகிய மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து நகர வீடுகளுக்கு பெரும்பாலும் வீட்டு வெளியாட்கள் வருவதில்லை. இந்த நடைமுறை நுவரேலியா மாவட்டத்தில் மாத்திரமே அதிகமாக நடக்கின்றது. இது ஒரு உளவியல் பிரச்சினை. வறுமை அல்ல. இதை அமைச்சர் கண்காணிக்க வேண்டும்.
குறிப்பாக, நுவரேலியா மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளிருந்து குறை பதின்ம வயதை கொண்ட சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அனுப்பப்பட்டால், அந்த பகுதி கிராமசேவையாளர், பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் பொறுப்பு ஆக்கப்பட வேண்டும். இத்தகைய பணிப்புரையை அமைச்சர் விடுக்க வேண்டும்.
வேலைக்கு அமர்த்த கூடிய குறைந்தபட்ச வயதெல்லை, 14ல் இருந்து 16 ஆக இவ்வருடம் ஜனவரி மாதம் உயர்த்தப்பட்டது. தற்சமயம் இந்த வயதெல்லை 18 ஆக உயர்த்தப்பட வேண்டி அமைச்சரவையில் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அறிகிறேன். இது ஒரு நல்ல காரியம். இதை செய்யுங்கள். சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வாருங்கள். நாங்கள் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்குகிறோம்.
தோட்ட தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பளம் என்றும், 25 நாட்கள் வேலை என்றும், ஆகவே மொத்தம் சம்பளம் 25,000 தொழில் அமைச்சர் கூறினார். அது உண்மையல்ல. அது அழகான கனவு மட்டுமே. நடைமுறையில், எத்தனை நாட்கள் வேலை, எவ்வளவு நிறை என்ற தடைகள் உள்ளன. ஆகவே தான் இன்று தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கிறது.
இன்று தொழில் அமைச்சர் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் மூலமாக, இத்தகையை துறைகளில் குறைந்தபட்ச நாட்சம்பளம் ரூ. 500 என்றும், மாத மொத்த சம்பளம் ரூ. 12,500 என்றும் கூறப்படுகிறது. இதைவிட குறைந்தபட்ச நாட்சம்பளம் ரூ. ஆயிரம் என்றும், மாத சம்பளம் 25 ஆயிரம் என்றும் தெளிவாக குறிப்பிட்டு இருந்தால் நீதிமன்றத்துக்கு இன்று போக வேண்டியது இல்லையே. ஆகவே இதை கவனத்தில் கொள்ளும்படி அமைச்சருக்கு கூறுகிறேன்.
நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கா விட்டால், தோட்ட தொழிலாளருக்கு என விசேட சட்டம் கொண்டு வருவதாக அமைச்சர் கூறினார். இது நடைமுறையாகும் என்றால், அதற்கும் இரண்டு கைகளையும் உயர்த்தி தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு தரும் என நான் இங்கே உறுதி கூற விரும்புகிறேன்.