உள்நாட்டு செய்தி
துமிந்த சில்வாவின் விடுதலையால் அதிர்ப்தியடைந்துள்ள அமெரிக்க தூதுவர்

துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தனது, ட்விட்டரில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தமிழ் கைதிகளின் ஆரம்ப விடுதலையை வரவேற்பதாகவும், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு, சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை, மன்னிப்பு வழங்குவதற்கான சரியான நடைமுறையை ஜனாதிபதி பின்பற்றியுள்ளாரா? என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாக இலங்கை சட்டதரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், அரசியல் பழிவாங்கலுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து நீதிமன்றம் வழங்கிய முடிவுகளை மாற்றியமைக்க சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரன்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவுடன் எந்த தொடர்பும் இல்லாத துமிந்த சில்வாவின் வழக்கை ஆணைக்குழுவின் இறுதி சந்தர்ப்பத்தில் ஏற்றுக் கொண்டமையும், இதுபோன்ற தீவிரமான முடிவை அரசியல் பழிவாங்கலில் பதிவு செய்தமையும், நீதிதுறைக்கு ஏற்படுத்தப்பட்ட இழுக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்தமை குறித்து விளக்கமளிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியுள்ளவர்களை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் என்ன என்பது குறித்தும் ஐக்கிய தேசிய கட்சி இதன்போது கேள்வி எழுப்பியுள்ளது.