உள்நாட்டு செய்தி
பேசாலை,தலைமன்னார் பகுதி மீனவர்கள் சிலர் தொடர்ந்தும் இந்திய மீனவர்களுடன் தொடர்பு
மன்னார் மாவட்டத்தில் மேலும் 31 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,பேசாலை,தலைமன்னார் பகுதிகளில் மீனவர்களுடன் இணைந்து கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சிலர் இந்திய மீனவர்களுடன் தொடர்ந்தும் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று திங்கட்கிழமை (31) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரங்களில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனைகளின் 801 முடிவுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) கிடைக்கப் பெற்றுள்ளது.இவற்றில் 31 நபர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த 31 கொரோனா தொற்றாளர்களில் 16 நபர்கள் கடற்படையைச் சேர்ந்தவர்களாகவும்,5 நபர்கள் ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறவினர்களாகவும்,6 நபர்கள் பேசாலையைச் சேர்ந்த மீனவர்களாகவும் 4 நபர்கள் ஏற்கனவே வங்காலை பகுதியில் தொற்றாளர்களுடன் தொடர்புடைய முதல் நிலை தொடர்புடையவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இவர்களுடன் சேர்த்து இந்த மாதம் தற்போது வரை 134 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் 476 தொற்றாளர்களும், மொத்தமாக மன்னார் மாவட்டத்தில் 493 நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதம் 2 ஆயிரத்து 981 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 16 ஆயிரத்து 951 பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேசாலை,தலைமன்னார் பகுதிகளில் மீனவர்களுடன் இணைந்து கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சிலர் இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு வருவதாக தொடர்ந்தும் எமது கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றது.இவ்விடையம் தொடர்பில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிகவும் விழிர்ப்புடன் இருக்க வேண்டும்.
இந்தியாவில் இருந்து பொருட்கள் மற்றும் மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் பொலிஸார் , கடற்படையினர் அல்லது சுகாதார திணைக்களத்தினருக்கு தகவல்களை வழங்கவும். வழங்கப்படும் தகவல்கள் இரகசியம் பேணப்படும்.
மன்னார் மாவட்டத்தில் அபாயம் கூடிய வகுப்பினர் என அடையாளம் காணப்படும் கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கின்றவர்களுக்கு வெகு விரைவில் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது.முதற்கட்டமாக 3500 தடுப்பூசிகளை வழங்குமாறு தொற்றுநோய் விஞ்ஞானவியல் பிரிவிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில வாரங்களில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
மேலும் மன்னார் தாரபுரம் இடை நிலை பெண்களுக்கான சிகிச்சை நிலையத்தில் 75 ற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை சிகிச்சையினை நிறைவு செய்து தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.இவர்களில் 40 பேர் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள்.தற்போது குறித்த சிகிச்சை நிலையத்தில் 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.