உள்நாட்டு செய்தி
வறுமையை ஒழிக்க திட்டத்துடன் செயற்படுகின்றேன் – ஜனாதிபதி
உழைக்கும் சமூகங்களை பெரிதும் பாதிக்கும் வறுமையை சமூகத்திலிருந்து ஒழிப்பதற்கான தெளிவான பொருளாதார திட்டத்தை வகுத்து, முறையாக செயற்படுத்தி வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாக, உழைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கக் கூடிய கட்டுப்பாடுகளை விதிக்காமல், அவர்கள் தமது இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கு ஏற்ற வகையில் அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களின் ஊதியங்கள் குறைக்கப்படவில்லை எனவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததன் மூலம், அந்த மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு அரசாங்கம் வழி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்திற்கான திட்டத்துடன் கைகோர்க்கும் தொழிலாளர்களின் மூலம், சர்வதேச தொழிலாளர் உரிமைகள் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.