உள்நாட்டு செய்தி
தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உழைக்கும் மக்கள் கைகோர்ப்பார்கள் – பிரதமர்
தமது நாட்டிற்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகினதும் முன்னேற்றத்திற்காகவும் உழைக்கும் மக்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வலிமையையும், ஒற்றுமையையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் ஒரு தினமாக, சர்வதேச தொழிலாளர் தினம் அமைந்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்தபடி ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுக்க முடிந்தமை அரசாங்கம் பெற்ற வெற்றியாகும் எனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிலாளர் சமூகத்தின் நலன் கருதி, பல்வேறு தொழிலாளர் சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ‘மக்கள் நலன் சார்ந்த பணியிடம், பாதுகாப்பான தேசம்’ எனும் தொனிப்பொருளிலான மே தினத்தில், தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உழைக்கும் மக்கள் அனைவரும் கைகோர்ப்பார்கள் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.