உள்நாட்டு செய்தி
செயற்கை நுண்ணறிவை சுகாதார துறையில் உள்வாங்க வேண்டும்
இந்நாட்டில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 – 40 பேர் வரையிலானவர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் என்றும், இதே நிலை தொடர்வது சிறந்ததல்ல என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.நெதர்லாந்து அரசாங்கத்தின் DRIVE இலகுக் கடன் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பருத்தித்துறை ஆரம்ப வைத்தியசாலையின் அவசர விபத்து மற்றும் சிகிச்சை பிரிவின் புதிய கட்டிடத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்காக நேற்று (22) இடம்பெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.வைத்திய மற்றும் தாதியர் சேவைக்காக பயிற்றுவிக்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்திடம் தான் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.அதேநேரம் தேசிய வியாபார முகாமைத்துவ பாடசாலையான (NSBM)மற்றும் பசுமை பல்கலைக்கழகத்திற்கான வைத்தியசாலை ஒன்றை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் லயிசியம் வைத்தியசாலையும் அதற்கான கோரிக்கையை விடுத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.அதேபோல் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களையும் வைத்திய துறைக்குள் உள்வாங்கி நவீன வைத்திய முறைமைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.பருத்தித்துறை வைத்தியசாலையின் புதிய அவிருத்திக்காக நெதர்லாந்தின் DRIVE இலகுக் கடன் முறையின் கீழ் 04 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதோடு, அதனால் வைத்தியசாலையின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.